Saturday 5 September 2015

புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள்

Unknown
பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மாகாண சபை உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மாகாண சபைகளில் நிலவியுள்ள உறுப்பினர் வெற்றிடங்களுக்கான புதியவர்களின் பெயர்கள் ஒரு சில மாகாணங்களில் இருந்து தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரம் தெரிவிக்கின்றது.

மாகாண சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளின் வேட்பாளர் பட்டியலுக்கு அமைவாக பெயர்கள் தெரிவுசெய்யப்பட்டு உறுப்பினர் பதவிகளுக்காக பிரேரிக்கப்படும்.
சகல மாகாண சபைகளினதும் உறுப்பினர் வெற்றிடங்களுக்கான பெயர்களை விரைவில் வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் வழங்கிய ஆணைக்கிணங்க அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனாக செயற்படுவேன்

வி.சுகிர்தகுமார்

 அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ் கிராமங்களிலும் உன்னதமான வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன்  தமிழ் மக்களுக்கு  உண்மையான, நேர்மையான தலைமைத்துவத்தை வழங்குவேன் என அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார். நேற்று மாலை (04) அக்கரைப்பற்றில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். நாடாளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொண்டு அக்கரைப்பற்றுக்கு வருகை தந்த அவரை பெருந்திரளான மக்கள் ஒன்றுசேர்ந்து மத்திய சந்தைப்பகுதியில் வைத்து மாலை அணிவித்து  வரவேற்றனர். பின்னர் மேளதாள நாதஸ்வரங்களுடன் ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் வரை அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர் மக்களுக்கு நன்றி தெரிவித்து  உரையாற்றினார். நன்றியுரையின்போது  'மக்கள் வழங்கிய ஆணைக்கிணங்க அவர்களின் நம்பிக்கைக்கு  பாத்திரமானவனாக செயற்படுவேன். என்றும் அவர்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்' எனஅவர் உறுதியளித்தார். இதற்காக பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதுடன்; தம்முடன் இணைந்து சேவையாற்ற முன்வரவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுத்தார் 

Monday 31 August 2015

வெளிநாட்டு வாழ் இலங்கைப் பிரஜைகளுக்கு அழைப்பு

ரமீஸ் 

இலங்கையின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாட்டு வாழ் இலங்கை மக்கள் சுமார் 20 இலட்சம் பேர் வாக்குரிமையின்றி இருப்பது கவலைக்குரிய விடயம். இந்த ஜனநாயக நாட்டில் வாக்குரிமையை ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் பெற வேண்டுமென்பதை வலியுறுத்திப் பெறுவதற்காக இலங்கைக்கு வெளியில் வாழும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் அமைப்புக்களும் ஒன்றுபடுவதற்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை இடம்பெயர் தொழிலாளர் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் றக்கீப் ஜௌபார் தெரிவித்தார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்;திப்பு  அக்கரைப்பற்று ரீ.எப்.சீ. கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (29) நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், 'உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் எமது அரசாங்கம் கரிசனை காட்டுவதில்லை. அரசாங்கம் உங்களுக்காக செலவு செய்வதில்லை. உங்களின் தொழிலுக்கு ஏதும் நடந்து நீங்கள் நாடு திரும்பினால் என்ன செய்வதென்று  உங்களுக்கு தெரியவில்லை. அதற்கு அரசாங்கம் எந்தவொரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. இன்னொரு தொழிலை தேடி பெற்றுக்கொள்ளும்வரை உங்களுக்கு ஊதியத்தை அரசாங்கம் தருவதில்லை' என்றார். 'புலம்பெயர் அமைப்புக்களும் தனி நபர்களும் ஒன்றுபட்டு அரசுக்கு சரியான அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் நாம் இழந்து நிற்கும் உரிமைகளை பெற வாய்ப்புள்ளது. எனவே, இதற்;காக எங்களுடன் இணைந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்' என்றார்.